Thursday, July 30, 2009

க....க....க.....கல்லூரி சாலை - வானத்தைப்போல

அப்போ நாங்க காலேஜுல செகண்ட் இயர்.



ஒரு சனிக்கிழமை ஹாஸ்டல்ல உட்கார்ந்து படிச்சிக்கிட்டிருந்தோம். எங்க ரூம்ல ரெண்டு க்ரூப் இருந்துச்சு. சும்மா நச நசன்னு ஒரு க்ரூப்காரங்க பேசிக்கிட்டே இருந்தாங்க. அப்ப ஒரு போட்டி வெச்சோம். சனிக்கிழமை மத்தியானம் அவுட்டிங் உண்டு. அப்போ அங்க உள்ள பாடாவதி தியேட்டர்ல ஏதாவது பாடாவதி படம் பாப்போம். போட்டி என்னன்னா ஸ்டடி டைம்ல எந்த க்ரூப் முதல்ல பேசுறாங்களோ அவங்க ரூம்ல உள்ள எல்லாரையும் ஏதாவது படத்துக்கு கூட்டிக்கிட்டு போகணும். ஸ்டடி டைம் ஸ்டார்ட் ஆச்சு. ஏழரையும் சேர்ந்தே ஸ்டார்ட் ஆச்சு.



சுமார் ஒரு மணிநேரம்தான் ஆகியிருக்கும். என்னோட கிளாஸ்மேட் பக்கத்து ரூம்காரன் ஒருத்தன் ரூமுக்குள்ள வந்தான். நேரா என்கிட்ட வந்து சந்தேகம் கேட்டான். நானும் சைகையிலேயே அமைதியா இருக்கும்படி ரொம்ப நேரம் சொல்லிப்பார்த்தேன். அவன் கேட்கிற மாதிரி தெரியல. (ஆமா. நாம சொல்படி கேட்டால்ல நம்ம சொல்லுறத நாலு பேர் கேட்பாங்க. (நீதான் டைப் பண்ணுறியா. மெசேஜ் எல்லாம் பின்னுற.))



ரூம் மேட்ஸ் எல்லாம் லைட்டா டென்ஷன் ஆக ஆரம்பிச்சாங்க. சரின்னு அப்படியே விட்டிருந்தா கூட சுபமா முடிஞ்சிருக்குமோ என்னவோ. விதி யாரை விட்டது. நானே ஆரம்பிச்சேன். 'ஏன்டா எவ்ளோ நேரமா அமைதியா இருன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்'னு சொல்லி கல்லூரி மாணவர்களுடைய தாய்மொழியில் நாலு நல்ல வார்த்தைய சொன்னேன். அவன் அமைதியா 'இத முன்னாடியே சொல்லியிருந்தா நான் வேற யாருக்கிட்டயாவது கேட்டிருப்பன்ல. சாரி நண்பா'ன்னு சொல்லிட்டு போயிட்டான்.



ரூம் மேட்ஸ் எல்லாம் ஒண்ணு கூடிட்டாங்க. நீதான் படத்துக்கு கூட்டிட்டு போகணும்னு தீர்மானம் போட்டுட்டாங்க. ரூம்ல மொத்தம் பத்து பேரு. ஒரு தியேட்டருல 'டாடி'ன்னு இங்கிலீஷ் டப்பிங் படம் போட்டிருந்தாங்க. ரூம் மேட்ஸ் எல்லாரும் அந்த படத்துக்குக்தான் போகணும்னு சொன்னாங்க. இன்னொரு தியேட்டருல 'வானத்தைப்போல' படம் போட்டிருந்தாங்க. நான் இந்த படத்துக்கு கூப்பிட்டா யாரும் வரமாட்டானுங்கன்னு நெனைச்சிக்கிட்டு நான் அந்த படத்துக்குத்தான் கூட்டிக்கிட்டு போவேன்னு சொல்லிட்டேன். எல்லாரும் சரின்னு சொல்லிட்டாங்க. (பேசாம இங்கிலீஷ் படமே பாத்திருக்கலாம். விதி யாரை விட்டது)

எல்லாரும் சாப்பிட்டு முடித்தபிறகு தியேட்டருக்கு படையா கிளம்பியாச்சு. பத்து பேருக்கு ரூ. 28.50 கொடுத்து (ஒரு டிக்கெட் ரூ2.85) டிக்கெட் எடுத்து உள்ளே போயாச்சு. சனிக்கிழமையில மேக்ஸிமம் எங்க காலேஜ் பசங்க மட்டும்தான் தியேட்டருல இருப்பாங்க. அன்னைக்குன்னு பார்த்து விக்ரமன் படத்து பேமிலி ஆடியன்ஸும் நெறை பேரு இருந்தாங்க. உள்ள போயி முதல் வரிசையிலே உட்கார்ந்தாச்சு. படமும் ஆரம்பிச்சாச்சு. அதுவரைக்கும் அமைதியா இருந்தவனுங்க கேப்டன நக்கலடிக்க ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு டயலாக்குக்கும் எதிர் டயலாக் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. பின்னால உட்கார்ந்து இருந்த ஒரு அம்மா டென்ஷனாயி சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த நேரம் பார்த்து கரண்ட் கட்டாயிருச்சு. 'ஓ'ன்னு ஊளையிட ஆரம்பிச்சிட்டானுங்க பசங்க. ஜெனரேட்டர் போட்டு படம் ஆரம்பிச்ச பிறகும் கத்திக்கிட்டே இருந்தாங்களா, அந்த அம்மா மறுபடியும் டென்ஷனாகி 'குடும்ப படம் ஓடுற தியேட்டருல வந்து சத்தம் போடுறீங்களே. வேற தியேட்டருல போயி சத்தம் போட வேண்டியதுதானே'ன்னு சொல்ல வாய் வார்த்த தடிக்க ஆரம்பிச்சுச்சு. பக்கத்துல உட்கார்ந்து இருந்தவங்கல்லாம் அந்த அம்மாவுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க.

தியேட்டர் மேனேஜர் படத்த நிறுத்திட்டு உள்ள வந்துட்டாரு. எல்லாம் ஒண்ணுமே தெரியாத மாதிரி அமைதியா இருந்தானுங்க. அவர் என்கிட்ட வந்து 'படிக்கிற பசங்க இது மாதிரியெல்லாம் பண்ணலாமா'ன்னு கேட்டுட்டு 'அமைதியா படம் பாருங்க'ன்னு சொல்லிட்டு வெளியே போகப்போனாரு. அப்போ எங்கள்ள ஒருத்தன் 'படிக்கிற பசங்கன்னா யாரு'ன்னு சத்தமா கேட்க, அவரு மறுபடியும் உள்ள வந்து எல்லாரும் வெளில போங்கன்னு சொல்லிட்டாரு. நம்மலால பப்ளிக் டிஸ்டர்ப் ஆகக்கூடாதுங்கற நல்லெண்ணத்துல நான் எந்திருச்சு வெளில வந்துட்டேன். பசங்களும் ஒவ்வொருத்தனா வெளில வந்துட்டானுங்க.

இதையெல்லாம் அமைதியா பாத்துக்கிட்டிருந்த சீனியர் பசங்க, அவிங்கள யாருமே மதிக்கமாட்டேங்குறாங்கங்கிற வயித்தெரிச்செலில் ஹாஸ்டல் வார்டனுகிட்ட போட்டு கொடுத்திட்டானுங்க.

இதன் விளைவு : என்னோட முதல் சஸ்பென்ஷன் ஆர்டர் ரெடி ஆயிடுச்சு.

இதனால் அறியப்படும் நீதி: கேப்டன யாரும் நக்கல் பண்ணாதீங்க.

Tuesday, July 21, 2009

வீர பாண்டிய கட்டபொம்மன் - ரீமேக்

டிஸ்கி 1: இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல.

டிஸ்கி 2: அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க.

நம்ம நடிகர் திலகம் நடிச்ச படத்தை எல்லாரும் பாத்திருப்பீங்க. அதில் நம் இளைய தலவிதி (சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் - தளபதி) நடித்திருந்தால்.......

ஒரு சிறிய கற்பனை. ஜாக்ஸன் ஒரு தியேட்டர் ஓனர்.

இ.த: ன்னா, நீங்தான் சாக்சன் தொரைங்ளா.

ஜாக்ஸன் : நீர்தான் இளைய தலைவலியோ.

இ.த: ஓய் யார பாத்து தலைன்ன.

ஜாக்: (மனதிற்குள்) தலைவலின்னதுக்கு கோபம் வரலையாம். தலைன்னு சொன்னதுக்கு கோபம் வந்திருச்சாம். (சத்தமாக) சாரி தளபதின்னு சொன்னேன். டங்க் ஸிலிப் ஆயிடுச்சு.

இ.த: ன்னா, நீங் வரச்சொன்னதா சொன்னாங்னா. எதுக் வரச்சொன்னீங்னா.

ஜாக்: இது வரையில் நீங்கள் எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவில்லை. படத்தை போஸ்டரில் பார்த்து இறந்தவர்களுக்கு ஜீவனாம்சமும் கொடுக்கவில்லை. இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் கொடுக்கவில்லை.

இ.த: நஷ்ட ஈடு, ஜீவனாம்சம், வட்டி. இல்ல நான் தெரியாமத்தான் கேக்றேன். நான் நடிக்கிறேன். வேலை வெட்டி இல்லாதவங்க தியேட்டர்ல வந்து பாக்குறாங்க. நான் எதுக்குங்க குடுக்கணும் நஷ்ட ஈடு. நீங் என்னோட சூட்டிங் வந்தீங்களா, கிளாப் அடிச்சீங்களா, லைட் பாயா இருந்தீங்களா, கேமரா லென்ஸ தொடச்சு கொடுத்தீங்களா, என்னாலய பாக்க முடியாத என் மூஞ்சை மேக்-அப் போட்டு மாத்தினீங்களா, படம் ஓடுற தியேட்டர்ல ஆப்பரேட்டராவாது வேலை பாத்திருக்கீங்களா? இல்ல நீங் புரடீயூசருங்களா, டேரக்ட்டருங்களா? மானங்கெட்டவருங்களே என்கிட்ட எதுக்குங் கேட்குறீங் ஜீவனாம்சம், வட்டி. இன்னொரு தடவ இப்படி கேட்டீங்னா வேட்டைகாரனும் உங்க தியேட்டர்லதானுங்கோ.

ஜாக் : உங்களை அழைத்து வரச்சொல்லி ஆளனுப்பினேனே?

இ.த : அப்படியா? அவன் புத்திசாலி. எங்க என் அடுத்த படத்து ப்ரி வ்யூ ஷோவுக்கு அழைச்சிக்கிட்டு போயிடுவேனோன்னு பயந்திருப்பான். என்ன இதுவரைக்கும் யாரும் கூப்பிட்டதே இல்ல. நீ என்னடான்னா ஆள் அனுப்புனன்னு என்கிட்டயே சொல்ற. இனிமேலும் உன்ன விட்டுவைக்க கூடாது. ஆனாலும் அடுத்த படத்தை ரிலீஸ் பண்ண தியேட்டர் கிடைக்காம போயிடுமோன்னும் பயமா இருக்கு.

ஜாக் : வேண்டாம். இதோட நிறுத்திக்கலாம். நான் நாளைக்கே தியேட்டர இடிச்சு ஊரு கோயிலுக்கு எழுதி வெச்சுட்டு காசில போயி செட்டில் ஆகப்போறேன்.

இ.த: ன்னா, ன்னா

ஜாக் வெளில போன வேகத்துக்கு இன்னேரம் காசிக்கே போயி சேர்ந்திருப்பாரு.

-----------------------------------------------------------------------------------
தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.
------------------------------------------------------------------------------------

Wednesday, July 15, 2009

இதழோடு இதழாக - பாகம் 3

தொடர்கதையின் முதல் பாகம்



தொடர்கதையின் இரண்டாம் பாகம்





தொடர்கிறது...............

------------------------------------------------------------------

பிளாஷ் பேக் : ஒன்பது வருடங்களுக்கு முன்னர்

------------------------------------------------------------------

காட்சி : 3

இடம்: ஒரு பொறியியல் கல்லூரி IT பிரிவின் முதலாமாண்டு வகுப்பறை

பங்கேற்பாளர்கள் : மதியழகன், ராதா கிருட்டிணன், அன்பு, ராணி, அனிதா, கல்லூரி முதல்வர் மற்றும் அறிமுகம் தேவையில்லாத மாணவர்கள்



முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் நாள் வகுப்பு தொடங்கும் நாள்



மாணவர்கள் அறிமுகமில்லாததால் தனி தனியே அமர்ந்திருக்கின்றனர்.



--------------------------

ஒரு சிறு அறிமுகம்



ராதாவும், அன்புவும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக படித்தவர்கள். ராதாவுடைய அப்பா மிகப்பெரிய பல்கலை கழகத்தில் தமிழ் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர். அன்புவின் அப்பா காவல்துறையில் ஜெயிலராக உள்ளார். அன்புவும், அவனது அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். ஏனெனில் அன்புவின் அம்மா அவனது சிறு வயதிலேயே மறைந்துவிட்டார்.



மதி சிறு வயதிலேயே தாய் தந்தையை ஒரு விபத்தில் பலி கொடுத்தவன். அவன் தந்தை ஒரு சிறு வியாபாரி. மதியின் பாட்டி அவனை ஆறு வயது வரை வளர்த்தார். பாட்டி இறக்கும் தருவாயில் அவனை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுவிட்டார். ஆறு வயது முதல் பாதிரியார் ஜோசப்பால் வளர்க்கப்பட்டான். நல்ல புத்திசாலி. +2 வில் மாவட்டத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றவன்.



அனிதா, அழகான புத்திசாலிப்பெண். அழகிலும் அந்தஸ்திலும் சிறிது கர்வம் கொண்டவள். அவளது தந்தை அந்த கல்லூரி இயக்குனர்களில் ஒருவர். சொசைட்டியில் மதிப்பு மிக்கவர். ராணி அவளது தோழி.



இப்போதைக்கு அது போதும். தேவைப்படும் போது மேலும் விவரிப்போம்.



---------------------------------------



கல்லூரி முதல்வர் வகுப்புக்குள் நுழைகிறார்.



மாணவர்கள் (கோரஸாக): குட்மார்னிங் சார்



முதல்வர்: குட்மார்னிங் டியர் ஸ்டூடண்ட்ஸ். XYZ பொறியியல் கல்லூரி உங்களை வரவேற்கிறது. நமது கல்லூரிக்குள் ராகிங் கிடையாது. யாராவது ராகிங் செய்தால் அலுவலகத்தில் புகார் செய்யலாம். இப்போது உங்கள் ஆசிரியர்கள் வருவார்கள். இன்று அறிமுகம் மட்டுமே. நாளை முதல் வகுப்புகள் தொடங்கும். THANK YOU (என்றபடி வெளியேறுகிறார்).



----------------------------------------------------

காட்சி : 3A
இடம்: அதே வகுப்பறை
பங்கேற்பாளர்கள் : மாணவர்கள் மற்றும் ஆசிரியர் 1

-----------------------------------------------------



மாணவர்கள் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள்.



----------------------------------------------------
காட்சி : 3B

இடம்: அதே வகுப்பறை

பங்கேற்பாளர்கள் : மாணவர்கள் மற்றும் ஆசிரியர் 2
-----------------------------------------------------

மாணவர்கள் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள்.



----------------------------------------------------
காட்சி : 3C

இடம்: அதே வகுப்பறை

பங்கேற்பாளர்கள் : மாணவர்கள் மற்றும் ஆசிரியர் 3
-----------------------------------------------------

மாணவர்கள் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள்.



3A, 3B மற்றும் 3C காட்சிகள் EDIT செய்து காட்டப்படுகிறது.





(தொடரும்)

-----------------------------------------------------------------------------------

தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

------------------------------------------------------------------------------------

Sunday, July 12, 2009

க....க....க.....கல்லூரி சாலை

1999ல நாங்க காலேஜ் சேர்ந்த புதுசு.

நீலகிரி மாவட்டத்துல உள்ள ஒரு காலேஜ்லதான் சேர்ந்திருந்தேன். மொத நாளு ஹாஸ்டல்ல ராகிங் கல கட்டிகிட்டிருந்துச்சு. ஒரு சீனியரு என்கிட்ட வந்து உன் பேர் என்னன்னு கேட்டாரு. நான் பேர சொன்னேன் (Initial இல்லாம). உடனே அவரு ரோஜா படத்துக்கு மியூசிக் போட்டது யாருன்னு யாருன்னு கேட்டாரு. நானும் நம்மளோட I.Q வ test பண்ணுறாங்க போலருக்குன்னு நெனச்சுக்கிட்டே A.R.ரஹ்மான் அப்படின்னு சொன்னேன். உடனே அவரு கேட்டாரு A.R.ரஹ்மானோட அப்பாவுக்கெல்லாம் மரியாதை கொடுக்கிறே. உங்க அப்பாவுக்கு மரியாதை கொடுக்கமாட்டியான்னு. (எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க)

அப்புறமா கொஞ்ச நாளு கழிச்சு, நமக்கும் ஃபிரண்ட்ஸெல்லாம் செட்டான பிறகு ஒரு நாளு வெள்ளிகெழம சாயங்காலமா அரட்டை அடித்துகொண்டிருக்கும்போது, தண்ணி அடிப்பதை பற்றி பேச்சு வந்தது. எல்லாரும் சொல்லிக்கிட்டிருக்காய்ங்க, நான் ஆஃப் அடிப்பேன், குவாட்டர் அடிப்பேன் அப்படின்னு. ஒருத்தன் என்கிட்ட கேட்டான் நீ சரக்கு அடிப்பியான்னு. நான் கேட்டேன் சரக்குன்னா என்னன்னு. எல்லாரும் என்னையையே பச்சை புள்ளய பார்க்குற மாதிரி பாவமா பாக்குறாய்ங்க. சே, உண்மையை சொல்லியிருக்கலாமோன்னு கூட யோசிச்சேன். சரி என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாமுன்னு ஓரமா உட்கார்ந்திருந்தேன். என்னய ஒரு பொருட்டாவே மதிக்காம சனிக்கெழம சரக்கடிக்கலாமுன்னு பேசி முடிவே எடுத்துட்டானுங்க.

சனிக்கெழம ராத்திரி ஏழு மணிக்கு (நீலகிரியில ஆறு மணிக்கு மேலே ராத்திரிதான்) சனி புடிக்கபோறது தெரியாம எட்டு பேரு கெளம்பிட்டாங்க. போற போக்குல ஒருத்தன் என்னைய கூப்பிட்டான், வாடா கத்து தாரேண்ணு. அப்பையும் நான் அமைதியா இருந்தேன். என்னோட ஊர்க்காரனும் அவனுங்க கூட கெளம்புறான். அவன்கிட்டபோய் 'டேய் நாம ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்து மூணு மாசம் கூட முழுசா முடியல. ஏன்டா ரிஸ்க் எடுக்கிற' ன்னு கேட்டேன். அதுக்கு அந்த கூட்டத்திலே ஒருத்தன் 'நீதான் சரக்குன்னா என்னன்னு கேட்ட. ஏன்டா வர்ரவனையும் கெடுக்கிற' ன்னு கேட்டான். நல்லபடியா போயிட்டு பத்திரமா வாங்கடான்னு அவனுங்கள அனுப்பி வைச்சுட்டு, ரூமுக்கு போயி படுத்தாச்சு.

ஒரு ஒம்போது மணிக்கு ஹாஸ்டல்ல ஒரே சத்தம். போயி பாத்தா எட்டு பேருல நாலு பேரு ஹால்லய படுத்து கெடக்குறாங்க. ரெண்டு பேர காணும். ஒருத்தன் ரூம்ல போயி படுத்துட்டான். எங்க ஊர்க்காரன் மட்டும் திரு திருன்னு முழிச்சுக்கிட்டே நிக்குறான். என்னடா ஆச்சுன்னு கேட்டா ஒயின்ஸ் ஷாப்புலயே பிரச்சனைய ஆரம்பிச்சுடாய்ங்க. ரெண்டு பேரு படி ஏற முடியாம கீழேயே உட்கார்ந்திருக்காங்கன்னு சொன்னான். அப்படி என்னத்தடா குடிச்சீங்கன்னா, இதோ பாரு, இதிலே இருந்ததெல்லாம் குடிச்சாச்சு. இதுதான் மீதின்னு ஃஹாப் பாட்டில (MC) எடுத்து காமிச்சான். அதுல குவாட்டருக்கும் கொஞ்சம் கீழே சரக்கு இருந்திச்சு. அடப்பாவிகளான்னு சரக்க வாங்கி பத்திரமா வைச்சிட்டு கீழ இருந்தவனுங்களை பத்திரமா ரூமுக்குள்ள சேர்த்திட்டு நானும் போயி மிச்சமிருந்த சரக்க பாட்டிலிலேய தண்ணிய மிக்ஸ் குடிச்சுட்டு போயி படுத்தாச்சு.

ஞாயிற்றுகெழம காலையிலேயே ஹாஸ்டலுக்கு பிரின்ஸிபால் வந்துட்டாரு. யார் யாரு சரக்கடிச்சதுன்னு கேட்டு லிஸ்ட் ரெடி பண்ணி எட்டு பேரோட வீட்டுக்கும் தந்தி அடிச்சுட்டாங்க. பேரண்ட்ஸை உடனே வரச்சொல்லி.

எங்க ஊருக்கும் தந்தி போயி என்னோட அப்பாவும், எங்க ஊர்க்கார பையனோட அப்பாவும் புதன்கிழமை அன்னைக்கு வந்துட்டாங்க. நான் எங்க அப்பாட்ட போயி நீங்க ஏன் வந்தீங்கன்னா, அவரு கேட்டாரு, அப்ப நீ மாட்டிக்கலயான்னு? (பையன் மேல எவ்வளவு நம்பிக்கை).

மாட்டின எட்டு பேரையும் ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணுணாங்க. காலேஜிக்கும் விஜயதசமிக்காக ஒரு வாரம் லீவு விட்டுட்டாங்க.

--------------------------------------------------------------------------------
இதனால் அறியப்படும் நீதி: பெற்றோரை ஏமாற்றாதீர்கள்
---------------------------------------------------------------------------------

Saturday, July 11, 2009

இதழோடு இதழாக - பாகம் 2

தொடர்கதையின் முதல் பாகம்

காட்சி: 2
இடம்: சிறைச்சாலை வளாகம்
பங்கேற்பாளர்கள்: மதியழகன், சிறைக்காவலர், கைதிகள் 4 பேர்
நேரம்: மாலை ஆறு மணி

சிறைக்காவலர்: நேரமாச்சு, எல்லாரும் செல்லுக்கு போங்க.

மதி: சார், இந்த புக்கை படிச்சு முடிச்சுட்டேன். அப்துல் கலாமோட 'அக்னிச்சிறகுகள்' புத்தகம் கிடைக்குமா?

சி.கா: ஜெயிலர் அய்யா வந்தவுடனே கேட்டுட்டு சொல்றேன். (என்றபடி மதி தந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு நகர்கிறார்.)

கைதிகள் அனைவரும் செல்லுக்குள் செல்கிறார்கள். மதியும் செல்கிறான்.

----------------------------------------------------------
காட்சி: 2 A
இடம்: சிறை அறை
பங்கேற்பாளர்கள்: கைதிகள் 4 பேர், சிறைக்காவலர்

கைதி 1: அண்ணே, விஷயம் தெரியுமா?. மதியை ரிலீஸ் பண்ணப்போறாங்களாம்.

கைதி 2: அதுனாலே உனக்கு உன்ன பிரச்சனை?

கைதி 1: அதில்லண்ணே.

கைதி 2: என்னா நொதில்லண்ணே.

கைதி 1: அது வந்து...

கைதி 2: உனக்கு என்னடா ஆச்சு?

கைதி 3: அவன் கிடக்கிறான் விடுண்ணே.

கைதி 4: யாரிண்ணன் இந்த மதி?

கைதி 2: நீ புதுசுல்ல. அதான் தெரியல.

கைதி 4: நீங்க சொல்லுங்கண்ணே.

கைதி 2: எனக்கு அவனோட கேஸை பத்திதான் தெரியும். அவனைப்பத்தி தெரிஞ்சுக்கிட்டு நீ என்னா பண்ண போற?

கைதி 4: சும்மா தெரிங்சுக்கலாமுன்னுதான்...

கைதி 2: அவனோட பிரண்ட் பக்கத்து பிளாக்குலதான் இருக்கான். எது வேணும்னாலும் அவன்கிட்ட கேட்டுக்கோ.

கைதி 4: சரிண்ணே.

சி.கா: ஏய், என்னடா சத்தம்.

கைதி 1: சும்மா பேசிக்கிட்டிருந்தோம் சார்.

சி.கா: சும்மாவும் பேச வேண்டாம், சுமந்துகிட்டும் பேச வேண்டாம். படுத்து தூங்குங்கடா.

கைதி 1: சரி சார்.

காவலர் நகர்கிறார். கைதிகள் அனைவரும் படுத்துக்கொள்கிறார்கள்.

----------------------------------------------------------
காட்சி: 2 B
இடம்: சிறை அறை
பங்கேற்பாளர்கள்: சிறைக்காவலர், மதி

சி.கா: மதி, மதி

மதி: (படுக்கையிலிருந்து எழுந்தபடியே) சொல்லுங்க சார்

சி.கா: என்னப்பா, தூங்கிட்டியா?

மதி: இல்ல சார். சும்மா இப்போதான் படுத்தேன்.

சி.கா: அந்த புக்கு இப்போதைக்கு இல்லையாம். வேற ஏதாவது வேணுமான்னு ஜெயிலர் கேக்க சொன்னாரு.

மதி: இல்ல சார். கிடைக்கும் போது குடுத்தா போதும் சார்.

சி.கா: இன்னும் ஒரு வாரந்தான் இருப்பே இல்ல. வெளில போய் என்ன பண்ணுறதுன்னு ஏதாவது யோசிச்சு வச்சிருக்கியா?

மதி: இல்ல சார். வெளில போய் முதல்ல அனிதாவை பாக்கணும் சார்.

சி.கா: இப்போ அந்த பொண்ணு எங்கப்பா இருக்கு.

மதி: தெரியல சார். போன மாசம் லெட்டர் போட்டிருக்கேன். எப்படியும் பதில் வந்துரும் சார்.

சி.கா: சரிப்பா மதி. நான் கெளம்புறேன். நீ தூங்குப்பா.

மதி: சரி சார்.

மதி மெதுவாக கட்டிலில் அமர்கிறான். அப்படியே படுத்து மேலே ஓடிக்கொண்டிருக்கும் ஃபேனை உற்றுப்பார்க்கிறான்.

அப்படியே கொசுவர்த்தியை சுற்றி ஒரு ஃபிளாஷ் பேக்.


(தொடரும்)
-----------------------------------------------------------------------------------

தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. நன்றி.

------------------------------------------------------------------------------------

Thursday, July 9, 2009

இதழோடு இதழாக - பாகம் 1

இது ஒரு தொடர்கதைக்கான சிறிய முயற்சி. தங்கள் ஆதரவை அள்ளி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

காட்சி - 1
இடம் : ஏதாவது ஒரு மத்திய சிறைச்சாலை.
நடிகர்கள் : சிறைச்சாலை வார்டன், நமது கதாநாயகன் மதியழகன், சக கைதி ராமசாமி.

சி.வா : (தனது அறையில் விநாயகர் படம் போட்ட காலண்டர் முன்பு) ஆண்டவா எல்லாரையும் காப்பாற்று (என்றபடி தனது ரவுண்ட்ஸிற்கு கிளம்புகிறார்.

வரும் வழியில் சோகமாக கையில் புத்தகத்துடன் அமர்ந்திருக்கும் மதியைப் பார்த்து,

சி.வா : மதி, இங்கே வாப்பா.

மதி: சொல்லுங்க சார்.

சி.வா: நீ இங்கே வந்து இன்னையோட ஆறு வருஷம் முடிய போகுது. உன்னோட நன்னடத்தைக்காக உன்னை இன்னும் ஒரு வாரத்திலே ரிலீஸ் பண்ணலாமுன்னு மேலிடத்திற்கு லெட்டர் கொடுத்திருக்கிறேன். உன்கிட்டே சொல்லாமுண்ணுதான் வந்தேன்.

மதி: ரொம்ப நன்றி சார்.

சி.வா: அப்போ நான் கிளம்புறேன்.

மதி: சரிங்க சார்.

சி்.வா (மனதிற்குள்): எப்படியோ வாழ்ந்திருக்க வேண்டிய பிள்ளை. அதற்க்குத்தான் எத்தனை பிரச்சனை. (என்றபடி தன் அறைக்கு திரும்புகிறார்).

சக கைதி: என்னப்பா மதி, வெளிய போப்போற மாதிரி தெரியுது. ஆனா, சோகமான மூஞ்சை மட்டும் மாத்தவே மாட்டியா?

மதி லேசாக முறைக்கிறான்

ச.கை: அதானே பார்த்தேன். பேசிடாதே. வாயில வச்சிருக்கற முத்து கொட்டிட போகுது.

என்றபடி தன் செல்லுக்குள் செல்கிறான்.

(தொடரும்)

-----------------------------------------------------------------------------------

தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்க்கபடுகின்றன. நன்றி.

------------------------------------------------------------------------------------

Wednesday, July 1, 2009

காதலியை தேடி...

அதிகாலை
உதயமாக நீ
உதித்தாய்.

பகல் நேர
நிழலாக நீ
இருந்தாய்.

வைகறையில் நீ
எனை நெருங்கி
வந்தாய்.

நான் நெருங்கி வரும் போதோ
இரவாக நீ
மறைந்தாய்.

சில ஹைகூக்கள்

எதிர் கால
சுகத்தை நினைத்து
நிகழ கால இன்பங்களை
தொலைப்பவன்

NRI.




தன் வயிறை
காலி செய்து
அடுத்தவன் வயிறை
நிறைக்கும்

tiffin box.

என்னை பற்றி

அனைவருக்கும் வணக்கம்.


நான் பிறந்தது தஞ்சையில்.

குடிக்க பழகியது தஞ்சையில் தான்.

ஓவராக குடிக்க பழகியது ஊட்டியில்.

அதிகமாக குடித்தது கோவையில்.

தற்போது குடித்து கொண்டிருப்பது துபாயில்.

என்னுடைய ப்ளாகிற்கு அனைவரையும் வரவேற்கிறேன்.